மனநலன் பாதித்தவர் போல் கோயிலில் இருந்த ‘காதல்’ நடிகருக்கு மீண்டும் வாய்ப்பு!

1

‘விருச்சக காந்த்’ எனும் நடிகருக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார் நடிகர் அபி சரவணன்.

கடந்த ஒரு வாரமாக ‘காதல்’ படத்தில் நடித்த ‘விருச்சககாந்த்’ சென்னையில் உள்ள ஒரு கோவிலில் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார் என்றும், அவரை திரையுலகம் கண்டு கொள்ளுமா என்றும் செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ‘வேகத்தடை ‘ குறும்பட நிகழ்ச்சித் திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த அபி சரவணன், தன்னுடன் நடிகர் ‘விருச்சககாந்த்’தையும் அழைத்து வந்து அவருக்கு தேவையான உதவிகளைச் செய்தார். நேற்றும் ‘உறுதிகொள்’ ஆடியோ விழாவில் ‘விருச்சககாந்த்’துக்கு ஒரு காசோலையை அளித்தார்.

இதுகுறித்து கருத்து கூறிய அபி சரவணன், முதலில் இதற்கு காரணமான சாய் தீனா, மோகன் ஆகியோருக்கு நன்றி. என் மனதை ஒரு வாரமாக உறுத்திக் கொண்டிருந்த செய்தி, கோயிலில் பிச்சை எடுத்த நடிகர் ‘விருச்சககாந்த்” என்பதுதான்!

அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் இயலாத நிலையில் வாட்ஸ்அப்பில் சாய்தீனாவுடன் வீடியோவாகக் கண்டேன். உடனே அவரைத் தொடர்புகொண்டேன். மோகன் உதவியுடன்! அவரிடம் பேசி என்ன மாதிரியான உதவிகள் செய்யலாம் எனக் கேட்டேன். அவருக்கு மனத் தளர்ச்சி காரணமாக இவ்வாறு ஆனதாகத் தெரியவந்தது. அவருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பும், தங்குவதற்கு இடமும், அவரைத் தொடர்புகொள்ள ஒரு மொபைல்போனும் நல்ல உடையும் போதும் என்றார். பின் மாலை ஆர்.கேவி யில் ஒரு குறும்பட வெளியீடுக்காக செல்ல வேண்டியிருந்தது. எனவே விழா நடைபெறும் இடத்துக்கு விருச்சிககாந்த்தை வரவழைத்தேன். அந்த விழா மேடையில் உடனடி அவருக்கு தேவையான ஒரு புதிய ஆண்ட்ராய்டு மொபைல் போனும், ஒரு செட் ஷர்ட் ஜீன்ஸ்ஸும் கொடுத்தோம். ‘ஓவியா’ படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான காண்டீபனும் இணைந்து கொண்டார்.

தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் எனது படத்தின் இயக்குனரைத் தொடர்பு கொண்டு தகவல் சொன்னதும், மறு நாளே அவர் நடிப்பதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கினார். அடுத்த வாரம் தொடங்க இருக்கும் என் புதுப் படமான ‘சூறாவளி’யின் இயக்குனர் குமார்நந்தாவும் விருச்சிகாந்த் நடிக்க வாய்ப்பு வழங்கினார். மன்சூர் அலிகானும் அவரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த பேஷன் டிசைனர் ‘கிரிஷ்’, விருச்சிககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதோடு அவரை மாடலாகவும் பயன்படுத்தி கொள்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.

சக நடிகரான ‘விருச்சிககாந்த்’துக்கு என்னால் இயன்றதைச் செய்ய உதவிய இறைவனுக்கு நன்றி என்றார் அபி சரவணன்!

Loading...