பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை

1
பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை:- 
-தெலுங்கில் -பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா 
-தமிழாக்கம் – ராஜி ரகுநாதன் 
(Source: Editorial, Rushipeetham, July, 2017)

பசு வதைத் தடுப்பது என்பது மதம் தொடர்பான அம்சம் அல்ல. ஆவேசங்களையும், மேன்மேலும் ஆவேசங்களையும் விட்டுவிட்டு நிதானமாக வரலாற்றை ஆராய்ந்தால் இது நாட்டுக்குத் தேவையான ஒரு விஷயம் என்னும் உண்மை புரிய வரும்.

நம் பாரத நாட்டின் புராதன, தார்மீக நூல்களில் பசுவை வழிபாட்டிற்குரிய அன்னையாக கௌரவித்துள்ளார்கள்.  அதற்கு காரணம், மேன்மை பயக்கும் எந்த விஷயமென்றாலும் தெய்வமாகத் தொழும் பண்பாடு பழங்காலம் முதல் இந்நாட்டின் வழக்கம்.  பிராண சக்தியை அளிக்கும் சூரியனையும், பயிர் வகைகளை வளர்த்து அளிக்கும் நிலத்தையும், தாகம் தீர்க்கும் நீரையும் தேவதைகளாக எண்ணுவது ஒரு உயர்ந்த பாவனையே தவிர அதனை மத நம்பிக்கையாகப் பார்க்கக் கூடாது.

பசுமாட்டின் விஷயத்திற்கு வருவோம் …

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே கோ சம்ரக்ஷணை விஷயத்தில்  விவாதங்கள் நடந்து வந்துள்ளன.   சுதந்திரம் கிடைத்த பின் முதலில் கோ வதை தடுப்புச் சட்டமே பிரதான நிர்ணயமாக இருந்தது என்று மகாத்மா காந்திஜியேஅறிவித்துள்ளார்.

நம் நாட்டின் கொள்கைகளில் பசு பாதுகாப்பும் ஒன்று. நம் நாட்டில் இமயம் முதல் குமரி வரை பல்வேறு பசு மாட்டு வகைகள் இருப்பினும் அனைத்திற்கும் பொதுவான ஒரு அம்சம் உள்ளது. ‘மூபுரம்’ எனப்படும் திமில் மற்றும் பசுவின் கழுத்தின் கீழிருந்து தொங்கும் ‘அலைதாடி’ உடைய பசுக்கள் நம் நாட்டில் மட்டுமே காணப்படும் அரிதான கால்நடைச் செல்வம்.
இத்தகைய மாடுகளின் முதுகில் சுவர்ண நாடி எனப்படும் நாடி உள்ளது.  சூரிய கிரணங்களில் இருக்கும் ஒரு பிரத்தியேக சக்தியை கிரகிக்கும் சாமர்த்தியம் இந்த நாடிக்கு மட்டுமே உள்ளது.  மற்ற எந்த மிருகங்களிலும் இல்லாத விசேஷமான சிறப்பு இது.

அதன் காரணமாகவே பசுமாட்டின் பால், கோ ஜலம், (மூத்திரம்), கோமயம் (பசுஞ்சாணி), கோக்ருதம் எனப்படும் பசு நெய், பசுந்தயிர் என்பதான பஞ்சகவ்யம் மருத்துவ குணத்தோடு கூடியதாக உள்ளது.

துளசியை இந்துக்கள் பூஜித்தாலும் அதன் வியாதி நீக்கும் குணம் அனைத்துயிர்களுக்கும் நன்மை பயப்பது போலவே, பஞ்ச கவ்யம் அனைத்து மனிதர்களுக்கும் நன்மையளிக்கக் கூடியது.  மலம், மூத்திரத்திலும் கூட சிறந்த ஒளஷத சக்தி கொண்டிருப்பது பசு மாட்டின் சிறப்புகளில் ஒன்று.

இதனைக் கொண்டு எத்தனையோ நீண்ட கால நோய்களைத் தீர்க்கும் பஞ்ச கவ்யத்தாலான மருந்துகள் ஆயுர்வேத சாஸ்த்திரத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளுக்கு பசும்பாலை அனுபானமாகச் சேர்ப்பதுண்டு. அந்த அனுபானத்திற்கு நம் நாட்டு தேசீய பசு மாட்டுப் பாலைத் தவிர வேறு எந்த வகை பசுமாட்டுப் பாலைச் சேர்த்தாலும் பலனளிக்காது என்பது வைத்திய சாஸ்திரம் கூறும் தெளிவு.

விவசாயத்திக்குக் கூட இயற்கை எருவாக பசுஞ்சாணி, பசு மூத்திரம் பயன்படுகின்றன. பால் கறந்தாலும் இல்லாவிட்டாலும் இறக்கும் வரை தன் இருப்பினால் மண்ணிற்கும் மனிதனுக்கும் பசு நன்மை செய்கிறது என்பது உண்மை.  அம்மா என்ற உடனே நினைவுக்கு வருவது பசுமாடு. இது பல யுகங்களாக இந்திய நாட்டின் பண்பாடு.  இது மதம் தொடர்புடையது அல்ல.  படிப்படியாக நம் நாட்டில் பல ஆராய்ச்சிகளின் பின், நிர்ணயம் செய்த ஒரு உண்மை இது.

நம் தேசத்திற்கு மட்டுமே விசேஷமாக விளங்கும் ஒரு விலங்கினைக் காப்பாற்ற வேண்டியது நாட்டு மக்களின் கடமை. மற்ற நாடுகளில் இருந்து இங்கு வந்து நிலைத்து விட்ட பிறருக்கு, நம் நாட்டின் ஆதர்சங்கள், இலட்சியங்கள்  புரியாமல் போகலாம்.  எப்படியானாலும் புத்தர் பிறந்த இந்த பூமியில் ஒரு தீமையையாவது தடுப்பது தவறல்ல அல்லவா?

ஆனால் பிற மதங்களில் கூட ‘பசுமாட்டைக் கொல்’ என்று கட்டளையிடும் விதி எதுவும் இல்லை. சில முஸ்லீம் நண்பர்கள், கிறிஸ்தவ நண்பர்கள், தங்கள் மத நூல்களின் ஆதாரத்தோடு அவர்களுக்குக் கூட பசுமாடு பூஜிக்கத் தக்கதுதான் என்று விவரித்த போது ஆச்சர்யமாக இருந்தது.  இது வெறும் மத துவேஷத்தோடு இந்தியாவின் கொள்கையை காலால் மிதிக்க வேண்டுமென்ற முயற்சியே தவிர பசுவதை மறுப்பை எதிர்ப்பதில் வேறு எந்த காரணமும் இல்லை.

இது வரையிலேயே எவ்வளவோ சிறந்த பசுமாட்டு வகைகள்  மறைந்து போயின.  ஜீவ காருண்ய சங்கங்களுக்கு தெரியுமோ இல்லையோ, தினமும் பல லட்சம் பசுக்கள் இதயத்தை துளைக்கும் வண்ணம் உள்நாட்டு, வெளிநாட்டு நர ராட்சசர்களின் உணவிற்காக கொல்லப்படுகின்றன.

இதில் வெறும் மாமிச உணவு உண்பவர்களின் வழி முறை காணப்படுவதில்லை.  ஒரு கொடூரம் புலப்படுகிறது. இந்தியாவின் பிரத்தியேகமான ஓங்கோல் போன்ற பசு வகைகளை சில மேல் நாடுகளில் வளர்க்கும் ஆலோசனைகள் இருப்பதாக செய்தி வந்துளளது.

பசு மாடுகளைக் காக்கும் கருணையுள்ளம் கொண்ட எவ்வளவோ முஸ்லீம் சகோதரர்கள் உள்ளார்கள்.  வியாபாரத்திற்காக பசுக்களை கொல்பவர்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கையே அதிகம்.

கோ வதையை மறுப்பதற்கு மதத் தொடர்பான காரணம் இல்லை என்று கூறுவதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

கோ வதைத் தடுப்புச் சட்டங்கள்  ஏற்கெனவே இல்லாமல் இல்லை.  ஆனால் அவற்றில் உறுதியான நிலைப்பாடு  இல்லை.  தற்போது ஒரு முறைமையை, கச்சிதமாக அமல்படுத்தும் விதானத்தை இணைப்பது மட்டுமே நிகழ்கிறது.

மாமிச உணவை முழுமையாக நிறுத்தினால் நன்மை ஏற்படலாம்.  அஹிம்சை சிறந்ததே.  ஆனால் அந்த கொள்கை  எல்லோராலும் ஏற்க இயலாதது.  அதனால்தான் சிலவற்றுக்கு எல்லை வகுத்தனர்.  இந்த எல்லை முன்பு வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் கூறியபடி இருந்திருக்கலாம்.  பின்னர் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு சொல்லியிருக்கலாம்.

‘மாமிச உணவு உற்பத்தி செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படுவார்கள்’ என்பது சிலரின் வாதம்.  பின், மான், புலி, மயில் போன்ற வன விலங்குகளை வேட்டையாடினால் கடுமையாக தண்டிக்கும் சட்டங்கள் உள்ளனவே?  அவற்றையும் நீக்கி விட்டால் இன்னும் அதிக மாமிசம் உற்பத்தி செய்யலாம் என்று நியாயத்திற்கு எதிராக பேச இயலாது அல்லவா?  அது சட்டத்திற்கு உகந்ததல்ல என்பதால்.

அனைத்து வன விலங்குகளின் வதையையும் எதிர்த்துள்ள சட்டத்தோடு கூட, பழங்காலம் முதல் நம் இந்திய பூமியை கௌரவிக்கும் கோ மாதாவை காப்பாற்றுவதற்கு சட்டம் இயற்றுவதில் எந்த தவறும் இல்லை.  கோ சம்ரட்சணை இந்தியர்களின் கடமை.   நம் நாட்டின் பண்பாட்டினை காப்பாற்றிக் கொள்ளும் விதத்தில் கடமையை உணர்ந்த அனைவரும் இதனை வரவேற்று இந்த கோ வதையை நீக்குவதற்கு உதவ வேண்டும்.
Loading...