பகவத் கீதையைக் கேட்டால் பயமா?

1

பகவத் கீதையைக் கேட்டால் பயமா?
– பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் -ராஜி ரகுநாதன்
(Source: Rushipeetham Editorial, March, 2017)

ஒரு இளம் பெண் பேசும்போது கூறினாள், ” எனக்கு பகவத் கீதை என்ற பெயரைக்
கேட்டாலோ அதிலுள்ள சுலோகங்களைக் கேட்டாலோ பயமாக உள்ளது. உடம்பு நடுங்குகிறது”
என்று.

“ஏனம்மா? எதனால்?” நான் ஆச்சர்யமாகக் கேட்டேன். அதற்கு அவள் கூறிய பதில்
மேலும் திகைப்பை ஏற்படுத்தியது.

“யாரேனும் மரணமடைந்தால், சவ வண்டியில் எடுத்துச் செல்லும் போது இந்த
ரெக்கார்டு போடுவார்கள். அதுவே என் மனதில் முத்திரை விழுந்து விட்டது.
பெரியவர்கள் யாராவது இறந்து போனால் டி.வி. யில் கூட பகவத் கீதை சுலோகங்களை
போட்டு துக்கம் அனுஷ்டிப்பார்கள். அதனால் எனக்கு கீதை சுலோகம் என்றாலே பயம்
ஏற்படுகிறது”.

மற்றுமொரு இடத்தில் வேறொரு சந்தர்ப்பம்-
ஒரு சபை ஆரம்பிக்கும் போது மேடைமேல் யாரோ ஒருவர் மைக்கில் பகவத் கீதை
படித்தார். அப்போது அங்கிருந்த ஒரு அரசியல் தலைவர் எழுந்து, “சுபமாக சபை
ஆரம்பிக்கும் போது கீதையை ஏனய்யா பாடுகிறீர்கள்?” என்று எரிச்சலடைந்தார்.

அநேகமாக நிறைய பேரிடம் இது போன்ற அபிப்ராயம் இருப்பது தெரிகிறது. இதெல்லாம்
அஞ்ஞானத்தால் விளையும் அனர்த்தங்கள். இதன் மூலம் இந்துக்கள் தம் தர்ம
விஷயத்தில் எத்தனை தூரம் விலகியுள்ளார்கள், அறியாமையில் மூழ்கி வாழ்கிறார்கள்
என்பது புரிகிறது.

இதற்கு காரணம் என்ன?

பகவத் கீதையை வெறும் மரண சமயத்தில் மட்டுமே ரெகார்டு போட்டு அலற வைப்பது
ஏற்பில்லாத, பொருத்தமில்லாத செயல். உண்மையில் பகவத் கீதைக்கும் மரண
ஸம்ஸ்காரத்திற்கும் தொடர்பே கிடையாது. அந்த மாதிரி நேரங்களில் பகவத் கீதை,
விஷ்ணு சஹஸ்ர நாமம், சிவ நாமம் போன்றவற்றுக்கு தொடர்போ தேவையோ இல்லை.

சனாதன தர்மத்தின் நிலை மற்ற மதத்தவர்களைப் போன்றதல்ல. பிறப்பு முதல் இறப்பு
வரை பல்வேறு ஷோடச சம்ஸ்காரங்கள் உள்ளன. அந்தந்த சந்தர்பங்களில் செய்ய வேண்டிய
கர்மாக்கள், மந்திரங்கள் தனித் தனியாக உள்ளன. எல்லாவற்றிலும் ஒரே நூலை
படிக்கும் வழக்கமில்லை.

ஞானத்திற்காக பகவத் கீதையே தவிர, மரண சமய வைதீக கர்மாக்களுக்காக அல்ல. நம்
சம்பிரதாயத்தில் அந்த கிரியைகளும் சம்ஸ்காரங்களும் சிறப்பான விஞ்ஞானத்தோடு கூட
இணைந்துள்ளன. அவற்றுக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பு இல்லை.

கீதை உயிரோடு இருப்பவருக்கானது. சிறப்பாக வாழ விரும்புபவர்கள் படித்து
நடைமுறைப்படுத்த வேண்டிய ஞான சாஸ்திரம்.

இந்த விஷயத்தை மறந்து விட்டு வெறும் மரண நேரத்து கானமாக அதனைப் பாடுவது மகா
அபராதம். உடனே பொறுப்புள்ள பெரியவர்கள் முனைந்து மயானத்திலும், சவ
வாகனத்திலும், துக்க மேடைகளிலும் கீதை படிப்பதைத் தடுக்க வேண்டும்.

மற்றுமொரு விஷயம். இதர மதத்தவர்கள் அவர்களின் மரண வேளைகளில், அவர்களுடைய மத
கிரந்தங்களைத்தான் படிக்கிறார்கள். ஆனால் அதன் மூலம் அம்மதத்தவர்களுக்கு
பயமோ, அதன் மேல் இளக்கார பாவனையோ இல்லை. ஆனால் நம்மவர்களுக்கு மட்டும் இந்த
இரண்டுமே ஏற்பட்டுள்ளன.

சிறு வயதிலிருந்தே வீடுகளில் பிள்ளைகளுக்கு நம் மத நூல்களைப் பற்றி
தெரிவிக்காத பெரியவர்களே முதல் குற்றவாளிகள். வீட்டில் நம் மத நூல்களை
வைத்திருப்பதில்லை. ஸ்லோகங்களை சொல்லித் தருவதில்லை. அவற்றின் பொருள் கூட
யாருக்கும் தெரிவதில்லை.

முஸ்லீம் சகோதரர்கள் உருது கற்றுக் கொண்டு குரானை சிறுவயது முதலே அத்யயனம்
செய்கிறார்கள். தங்கள் மத ஆச்சாரங்களைக் கடை பிடிக்கிறார்கள். ஆனால் நம்
வீடுகளில் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் தாய்
மொழி செய்யுள் கூட வராது.

கீதையைப் பற்றிய புரிதல் தான் இல்லை. சரி. எந்த சந்தர்ப்பத்தில் எதைச் செய்ய
வேண்டும் என்று கூடத் தெரியாத தாழ்ந்த நிலையில் உள்ளோம். இதன் காரணமாக சுய
தர்மத்தில் நிஷ்டை ஏற்படுவதில்லை. கடைசியில் ‘கோவிந்தா’ நாமத்தைக் கேட்டால்
கூட சிலருக்கு சவ யாத்திரை நினைவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மனிதனை கடமை உணர்வுள்ளவனாக்கி தனி மனித மேம்பாட்டை மலரச் செய்து, அவனுள் உள்ள
ஆத்ம சக்திகளை விழிப்படையச் செய்து பயன்படும்படிச் செய்யும் சக்தி கீதா
போதனையில் உள்ளது. இது விஷயம் பற்றி பல மேல் நாட்டு அறிஞர்கள் அங்கீகரித்து
வெற்றிக்கான சூத்திரங்களாக, தனி மனித வளர்ச்சிக்கான பாடங்களாக படித்து
வருகிறார்கள். நாம் மட்டும் கண்டு கொள்ளாத அலட்சியத்தில் உள்ளோம்.

மற்றொருபுறம் மத மாற்றம் செய்யும் மேதாவிகள் வீசி எறியும் பிஸ்கட்டுகளுக்காக
ஏங்கி, அடிமை வேலை செய்யும் பாரத தேச மேதாவிகள் கீதை போன்ற சத்
கிரந்தங்களுக்கு இல்லாத அர்த்தங்களைக் கற்பித்து, தப்பும் தவறுமாக எதிர்
வியாக்யானம் செய்கையில் ‘எண்ணச் சுதந்திரம்’ என்ற பெயரில் அவற்றை ஏற்று
கண்டிக்காமல் தூங்குகிறார்கள் கீதை அபிமானிகள்.

ஒரு கீதை மட்டுமே என்று இல்லை. வேதங்களைக் கூட ஏதேதோ மொழி பெயர்ப்பு நூல்களை
படித்து விட்டு, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போடும் விதமாக
விக்ருத வியாக்கியானங்கள் செய்கிறார்கள்.

தம் மதத்தில் உள்ள சிறப்பு எதுவோ அதை மட்டும் சொல்லி விட்டு சும்மா இருந்தால்
போதாதா? மற்ற மதங்களைப் பற்றி பேசும் உரிமை, புரிதல் அவர்களுக்கு இல்லை.
சட்டப்படி குற்றம் கூட.

நம்மவர்களிடம் உள்ள புரிதல் குறைபாடு, இதரர்களிடம் இருக்கும் துர்மார்க்கமான
வஞ்சனை இரண்டும் சேர்ந்து ஹிந்து மதத்தில் தேவையற்ற அனர்த்த தோரணைகளை
ஏற்படுத்துகின்றன.

ஹிந்து சமுதாயம் தம் சம்பிரதாயம் என்ன? தர்ம ஞானம் என்ன? என்று அறிய முயற்சி
செய்ய வேண்டும். அவற்றை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கு ஸ்பஷ்டமாக ஆதாரத்தோடு சொல்லத் தகுந்த பெரியவர்கள் முனைந்து முயற்சித்து
விழிப்பு ஏற்படுத்த வேண்டும்.

Loading...