ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார், ராமதாஸ் இரங்கல்

2

ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார் .. தமிழ் உணர்வாளர் சிந்தனையாளர், தூரிகை
நெருப்பு ஓவியர் வீர .சந்தானம் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில்
மறைந்தார்.

ஓவியர் வீர. சந்தனத்தின் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்!

தமிழின உணர்வாளரும், புகழ்பெற்ற ஓவியருமான வீர.சந்தனம் உடல்நலக் குறைவால்
காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும்
அடைந்தேன்.

ஓவியர் சந்தனத்தின் தியாகங்களை எழுத்துக்களில் சாதாரணமாக வடித்துவிட முடியாது.
எளியக் குடும்பத்தில் பிறந்த வீர.சந்தனம் சுயம்புவாக வளர்ந்து ஓவியராக
உருவெடுத்தார். கலைஞன் என்பதன் உண்மையான அடையாளமாக திகழ்ந்தார். தனது வாழ்க்கை
முழுவதையும் தமிழுக்காகவும், ஈழத்தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணித்துக்
கொண்டவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் அன்புக்கும்
மரியாதைக்கும் பாத்திரமானவர். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை வடித்ததன்
மூலம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை உலகம் அறிந்து கொள்வதற்கு வழி
வகுத்தவர்.

எனது அன்புக்குரிய நண்பர்களில் ஒருவராக திகழ்ந்தார். தமிழ் மற்றும் தமிழ்
சார்ந்த பணிகளில் என்னோடு தோள்நின்றவர். தமிழ் தேசியத் தலைவர்கள் அனைவரின்
நம்பிக்கையையும், மரியாதையையும் வீர சந்தனம் பெற்றிருந்தார். அறம் மீது
மட்டுமே பற்று கொண்டிருந்த அவர், பொருள் மீது பற்றற்று இருந்தார். அவருக்கு
இருந்த தொடர்புகளை பொருளாதாரரீதியில் பயன்படுத்தியிருந்தால் அவரது நிலை
மிகப்பெரிய உயரத்தை எட்டியிருக்கும். ஆனால், தமது வாழ்நாள் முழுவதும்
தமிழுக்கும், தமிழருக்காகவும் உழைத்து எண்ணற்ற நண்பர்களையும், அவர்களின்
நம்பிக்கை மற்றும் மரியாதையையும் மட்டுமே சேர்த்து வைத்திருக்கிறார். அவர்
மறைந்தாலும் தமிழர்களின் மனங்களில் இறப்பின்றி வாழ்வார்.

ஓவியர் வீர சந்தனத்தின் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு
ஆகும். தமிழுக்காகவும், கலைக்காகவும் வாழ்ந்து மறைந்த வீர சந்தனத்திற்கு வீர
வணக்கங்களை செலுத்துகிறேன்

Loading...