பாவனா வழக்கில் ‘பலாத்கார’ பிரிவுகளில் திலீப் கைது; ‘அம்மா’ அமைப்பிலிருந்து நீக்குவதாக மம்முட்டி அறிவிப்பு!

1

திருவனந்தபுரம்:

நடிகை பாவனா வழக்கில் நடிகர் திலீப் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டார். இதை அடுத்து, அவரை திரைப்பட நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் இருந்து நீக்குவதாக மம்முட்டி தெரிவித்தார். திலீப் மீது ‘பாலியல் பலாத்கார’ குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு சிக்கல் நீடிக்கிறது.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்து கடத்தியது. காரில் வைத்து அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கேரளாவை உலுக்கி எடுத்தது. ஓரிரு நாளில் குற்றச்செயலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோணி கைது செய்யப்பட்டான். அவன் பல்சர் சுனில் என்பவனைக் குறித்தும், அவனது கூட்டாளிகள் குறித்தும் போலீஸாரிடம் தெரிவித்தான். இதை அடுத்து பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் வேறு சிலரின் தூண்டுதலும் சதியும் இருப்பதாக போலீஸார் சந்தேகித்தனர். எனவே சதி குறித்த பின்னணியை அறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சந்தியா, வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக துவக்கத்தில் இருந்தே கூறப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்து வந்தார். பல்சர் சுனில் யாரென்றே தனக்குத் தெரியாது என்று கூறிவந்தார்.

இந்நிலையில்தான் திடீர் திருப்பமாக இந்த வழக்கில் தொடர்புடையதாக நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார். நடிகை பாவனாவைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ய சதி செய்ததாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகை காரணமாகவே நடிகர் திலீப் இத்தகைய சதித்திட்டம் தீட்டியதாகவும் போலீஸார் கூறினர். நடிகர் திலீப்புக்கு எதிராக போலீஸார் 19 முக்கிய ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும் 2 வது குற்றவாளியாக நடிகர் திலிப்பும் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் குற்றவாளி சுனிலுக்கு நடிகர் திலீப் இந்தக் குற்றச் செயலுக்கு ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட திலீப் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பட்டார். இன்று காலை கொச்சியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள அலுவா துணைச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் 2ஆம் எண் செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 523 வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கமாலி சிறைச் சாலையில் இருந்து இன்று நடிகர் திலீப் அங்கமாலி நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். கேரள போலீஸார் நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்த அனுமதி கோரினர். போலீஸார் திலீப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்தது.

இதனிடையே நடிகர் திலீப் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. பாவனா கடத்தலில் திலீப் நேரடியாக ஈடுபடாத நிலையிலும், அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கடுமையான சட்டப் பிரிவுகளும் திலீப் மீது சுமத்தப் பட்டுள்ளன.

120(பி) (கூட்டு சதி), 342 (தவறான தகவல்களை தந்தது), 376(டி) (கூட்டு பலாத்காரம்), 411 (ஆவணங்களை மறைக்க முயற்சி செய்தல்), 506(1) (மிரட்டல்), 201 (வழக்கு தொடர்பான தடயங்களை மறைத்தல்), 212 (குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல்), 34 (திட்டமிட்டு செயல்படுதல்) உள்ளிட்ட 9 பிரிவுகளில் திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு பலாத்கார சட்டப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் திலீப்புக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பாவனா விவகாரத்தில் கைதான திலீப், கேரள நடிகர் சங்கம்- மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கம் ’அம்மா’வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சங்கத்தில் திலீப் பொருளாளராக இருந்தார். கொச்சியில் பானம்பள்ளி நகரில் நடிகர் மம்முட்டியின் வீட்டில் நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், ஆஷிப் அலி, தேவன், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சங்கக் கூட்டம் முடிந்ததும் நடிகர் மம்முட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது, நடிகர் திலிப் அம்மா சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுகிறார். நாங்கள் பாதிக்கப்பட்ட நடிகைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்றார். குறிப்பிட்ட ஒருவரை நாங்கள் எப்போதும் ஆதரித்தது இல்லை. இந்த அமைப்பு எலோருக்குமானது எனக் கூறினார்.

’அம்மா’ அமைப்பு மட்டுமல்லாது, கேரளத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கேரளா திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றில் இருந்தும் திலீப் நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, திலீப்பை திருமணம் செய்திருந்த நடிகை காவ்யா மாதவனுக்கு எதிராகவும் இரண்டு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். எனவே பாவனா வழக்கில், காவ்யா மற்றும் அவரது தாயை போலீஸார் இன்று தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பாவனாவைக் கடத்திய பல்சர் சுனில், காவ்யாவின் கடைக்கு இரண்டு முறை சென்றது, அடுத்துள்ள கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ பதிவுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

வழக்கில் முதல் குற்றவாளியான பல்சர் சுனில் இதற்கு முன் நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான முகேஷிடம் ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளார் என்பதால் முகேஷிடம் போலீஸார் விசாரிக்கவுள்ளனர்.

திலீப் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் வளரும் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியார் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.

Loading...