ரூ. 2 கோடி புகார் 2 பேரையும் 2 கோடிக்கு தொரத்தி விட்ருச்சி!

0

சசிகலாவுக்கு சலுகை காட்ட ரூ.2 கோடி புகார்: சிறைத்துறை அதிகாரிகள் இருவரும் பணியிட மாற்றம்…

பெங்களூர்:

கர்நாடகத்தில் சிறைக் கைதியாக உள்ள சசிகலா சிறையில் சலுகை பெற ரூ.2 கோடி லஞ்சம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய டி.ஐ.ஜி., ரூபாவையும், டிஜிபி சத்யநாராயணாவையும் பணியிட மாற்றம் செய்தது கர்நாடக அரசு.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா சிறைவாசத்தை சுகபோகத்துடன் அனுபவிக்க ரூ.2 கோடி லஞ்சம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனியாக சமையலறை அமைக்கப்பட்டு இரண்டு தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டுள்ளது என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார். சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் தான் இந்த பணத்தை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்தப் புகார் குறித்து விசாரிக்க, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ள நிலையில், இன்னும் விசாரணையே துவங்கப்படாத நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா, பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

முன்னதாக, பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் முறைகேடுகளை ரூபாவிடம் சொன்ன கைதிகள், பெல்ஹாம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, சீருடை அணியாத காவலர்களால் முரட்டுத் தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. கைதிகள் போலீஸ் வாகனத்தில் வேறு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதும், அவர்கள் வெகு நேரம் கழித்து, வாகனத்தில் இருந்து இறங்கி செல்லும்போதும் நடக்கமுடியாமல் நடந்து சென்றதும், கடுமையாக தாக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. கைதிகள் வெளியேறிய அரை மணி நேரத்தில், சிறை அறையில் இருந்து சீருடை அணியாமல் மஃப்டியில் உள்ள போலீஸார் கைகளில் லத்திகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு வெளியே வருவதும் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தத் தகவல்கள் ஊடகங்களில் வெளியான உடன், ரூபாவுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக, சிறைக் கைதிகளை பலமாகத் தாக்கியுள்ளது தெரியவந்ததால், கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு எழுந்தது. இதனிடையே ஏடிஜிபி சத்யநாராயணாவும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிறைத்துறைக்கு ஏஎஸ் என் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Loading...