எந்த தனியார் நிறுவன பாலில் கலப்படம்?: விளக்கினார் ராஜேந்திர பாலாஜி

2

‘தனியார் பால் நிறுவனங்கள் பாலில் உயிருக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்திருக்கின்றன’ என்று கடந்த மே மாத இறுதியில் அதிரடியாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. அவரது இந்த திடீர் வெடிகுண்டு, தனியார் பால் தயாரிப்பு நிறுவனங்களை மட்டும் கலக்கவில்லை, பொதுமக்களையும் சேர்த்தே கதிகலங்க வைத்தன. தாங்கள் பருகும் பாலில் ரசாயனக் கலப்படம் உள்ளது என்று மாநில அமைச்சரே அறுதியிட்டுக் கூறுகினார் என்பதை எண்ணி அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்தன.

இதனிடையே தனியார் பால் நிறுவனங்கள் அளித்த புகார்களால், கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பால் மாதிரிகள், புனே இன்ஸ்டிடியூட்டில் சோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் அமைச்சர் கூறும் வகையில் ரசாயனக் கலப்படம் இல்லை என்று ஆய்வு அறிக்கைகள் வெளிவந்தன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நேற்று ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘நெஸ்லே எவ்ரி டே பால் பவுடரில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வு முடிவு அறிக்கை வந்துள்ளது. அதேபோல ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பவுடரிலும் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட லேப்பில் நடத்தப்பட்ட சோதனையில் இது தெரிய வந்துள்ளது.

கெட்டுப்போன பாலில் அமிலத்தன்மை குறைவதற்காக காஸ்டிக் சோடா சேர்க்கின்றனர். பின்னர், அதை பாலாக்காமல், பால் பவுடராகத் தயாரிக்கின்றனர். இதனால், காலரா, இதய நோய், சிறுநீரகக் கோளாறு, அல்சர் போன்ற நோய்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும், இதைச் சோதனை செய்யலாம். ஆவின் பால், தாய்ப்பாலுக்கு இணையானது என்று கூறியிருந்தேன். ஆவின் பொருள்களில் இதுபோன்ற எந்தக் கலப்படமும் இல்லை என்று சோதனை முடிவுகள் உறுதி செய்கின்றன.

மக்களின் விழிப்பு உணர்வுக்காகச் சொல்கிறேன். எல்லா நிறுவனமும் இதுபோன்ற கலப்படச் செயல்களில் ஈடுபடுவதில்லை. ஒரு சில தனியார் நிறுவனங்களே ஈடுபடுகின்றன. எனவே, பொது மக்கள் நிறுவனங்களை அறிந்து நல்ல பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். ஆய்வு முடிவுகள் முழுமையாக வந்தால் மேலும் சில நிறுவனங்கள் சிக்கும். தனியார் மற்றும் ஆவின் நிறுவன பால் பொருள்களைச் சோதித்துப் பார்க்கலாம் என்று கூறினார் ராஜேந்திர பாலாஜி.

மேலும், தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலும் விற்பனையும் அதிகரிக்கப்படும். பாலில் கலப்படம் செய்வோருக்கு, கூடுதல் தண்டனை வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. பால் கலப்படம் குறித்து சிலர் கேலி செய்து வருகின்றனர். எனக்குத் தொலைபேசி மூலம் தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டேயிருக்கிறது. இந்த விவகாரத்தில் யாருக்கும் பயப்படாமல் நடவடிக்கை எடுக்க முதல்வர் கூறியுள்ளார். இருப்பினும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரம் என்னிடம் இல்லை. அதிகாரம் என்னிடம் இருந்தால் உடனடியாக எடுப்பேன்’ என்றார்.

Loading...