பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் பேசக் கூடாது: நீதிமன்றம் வாய்ப்பூட்டு

2

madras-high-court

சென்னை:

பால் நிறுவனங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் எதுவும் பேசக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பால்வளத் துறை அமைச்சருக்கு வாய்ப்பூட்டு போட்டுள்ளது.

பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாகக் குற்றம்சாட்டி வந்தார். இது பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. இந்நிலையில், பால் கலப்படம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, ஹட்சன், டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதில் தீங்கு விளைவிக்கும் வகையில் தனியார் பாலில் எதும் கலக்கப்படவில்லை என்றும், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அவதூறு பரப்புவதைத் தடுக்குமாறும் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் பால் நிறுவனங்கள் மீது ஆதாரம் ஏதுமின்றி பேசக் கூடாது என்று உத்தரவிட்டது. இதுதொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம், பால் கலப்பட சிறப்பு தடைச் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இயற்றிட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று அச்சங்கத்தின் சார்பில் அதன் நிறுவுனர் ச.ஆ. பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில்,

“தனியார் பால் நிறுவனங்கள் ஹைட்ரஜன் பெராக்சைடு, பார்மாலின் உள்ளிட்ட உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனப் பொருட்களை கலப்படம் செய்கின்றன, தனியார் பால் நிறுவனங்களின் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்று நோய் வருகிறது” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தனியார் பால் நிறுவனங்கள் குறித்து தகுந்த ஆதாரமின்றி பேசுவதற்கு தடை விதிக்க கோரி சில தனியார் பால் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று (10.07.2017) தனியார் பால் நிறுவனங்கள் குறித்து தகுந்த ஆதாரமின்றி பேசுவதற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை எங்களது “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் மனதார வரவேற்கிறோம்.

மேலும் நாளை (11.07.2017) தமிழக சட்டப்பேரவையில் “பால் மானியக் கோரிக்கை மீதான விவாதம்” நடைபெற இருக்கும் சூழ்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பாலில் கலப்படம் செய்வோருக்கு “ஆயுள் தண்டனை” விதிக்கின்ற வகையில் அந்தந்த மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என 2013, 2014ம் ஆண்டுகளில் இடைக்கால உத்தரவும், 2016ம் ஆண்டில் இறுதி உத்தரவும் பிறப்பித்த உச்சநீதிமன்றத்தின் ஆணையை கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்றிட பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள், நோயாளிகள் என பொதுமக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய, அவசியமான உணவுப் பொருளாக விளங்கும் “பாலில் கலப்படம் செய்வோருக்கு ஆயுள் தண்டனை” விதிக்கின்ற வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே “பால் கலப்பட சிறப்பு தடைச் சட்டம்” நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“பால் கலப்பட சிறப்பு தடைச் சட்டம்” இயற்றுவதோடு மட்டுமில்லாமல் கலப்பட பால் நிறுவனங்களை கண்டறிந்து இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும், கலப்பட பாலை முற்றிலுமாக ஒழிக்கவும் தமிழக அரசு சார்பில் ஒரு “ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில், பால் தொழில்நுட்பம் தெரிந்த அதிகாரிகள், பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள்” என “ஐவர்” அடங்கிய “அதிரடிப்படை நிபுணர் குழு”வை அமைக்க வேண்டும், ஏனெனில் நாளொன்றுக்கு பல கோடிக்கணக்கான பால் பாக்கெட்டுகளை அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் தயாரித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுப்புகின்றன. அவ்வாறு சந்தைப்படுத்தப்படும் பால் பாக்கெட்டுகளை தமிழகத்தின் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் ஆய்வுக்காக எடுத்து சோதனை செய்து விட்டு ஒரு நிறுவனம் தரமான நிறுவனம் என்றோ அல்லது தரமற்ற நிறுவனம் என்றோ முடிவு செய்வது சரியல்ல.

எனவே அதிரடிப்படை நிபுணர் குழுவினர் வாரந்தோறும் அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் ஒவ்வொன்றின் தொழிற்சாலைகளுக்கும் நேரிடையாக சென்று அந்நிறுவனத்தில் பாக்கெட் செய்யப்படும் பாலின் மாதிரிகளை எடுத்து அங்கேயே ஆய்வு செய்ய வேண்டும். அப்போது பாலில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்நிறுவனத்தை இழுத்து மூடி சீல் வைப்பதோடு, அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், உரிமையாளர்கள் மீது பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் வகையில் அதிகாரம் கொண்டதாக “பால் கலப்பட சிறப்பு தடைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

அதுமட்டுமன்றி கலப்பட பால் தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை பதிவிடவும், அதிரடிப்படை நிபுணர் குழுவின் நடவடிக்கைகளை திறந்த மனதோடு, ஒளிவு மறைவின்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க தமிழக அரசு சார்பில் “சிறப்பு இணையதளம்” தொடங்கவும் சுகாதாரத்துறை மற்றும் பால்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் பொதுமக்கள் நலன் சார்ந்த “பால் கலப்பட சிறப்பு தடைச் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இயற்றிட தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Loading...