காலமான கதைசொல்லி கழனியூரன்: இரங்கல் செய்தி

2

இன்று … வருந்தத்தக்க செய்தியைப் பகிர்ந்தார் நிமிரவைத்த நெல்லை நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

எங்கள் நெல்லை மாவட்டத்தின் தென்காசிக்கு அருகில் உள்ள கழுநீர்குளம் என்ற ஊரில் பிறந்ததால் தன் பெயரை கழனியூரான் என்றே வைத்துக் கொண்ட மூத்த நண்பர் எம்.எஸ்.அப்துல் காதர் இன்று மறைந்தார் என்ற செய்திதான் அது… இன்று (27.6.2017) காலை சுமார் 10.47 மணியளவில் இயற்கை அவர் உயிரைப் பறித்துக் கொண்டது.

1954ல் பிறந்தவர். ஆசிரியப் பணியில் இருந்தார். என்பள்ளிக்கூட வயதில் தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வைத்து அவருக்கு நான் அறிமுகமானேன். அதன் பின்னும் சிற்சில கூட்டங்களில் சந்திப்பேன். நான் மஞ்சரி இதழின் ஆசிரியராக இருந்தபோது, ரசிகமணி டி.கே.சி.யின் பெயரனார் தீப.நடராஜன் ஐயா இல்லத்தில் வைத்து சந்தித்தேன். அந்த அரை நாளில் ஒரு தீபாவளி மலருக்கான அனைத்து விஷயங்களை அந்த இல்லத்தில் இருந்தபடியே முடித்தேன். மஞ்சரி தீபாவளி மலர் 2006ல் அவர் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.

கரிசல்கட்டு நாயகன் என அன்போடு நாங்கள் அழைத்து மகிழும் எழுத்தாளர் கி.ரா.,வின் அத்யந்த சீடர். எனவே, கி.ராஜநாராயணன் குறித்து நீங்களே எழுதுங்கள் என்று அவரிடம் பொறுப்பைக் கொடுத்தேன். சிறப்பாக செய்தார்.

கதைசொல்லி – இதுதான் கரிசல்காட்டு இலக்கியத்தின் தளமாக இருந்தது. இந்தக் கதைசொல்லி – இதழாகப் பரிமளித்தது. அதன் பொறுப்பாசிரியராகவும் திகழ்ந்தார் கழனியூரான்.

கழனியூரான் என்பேன். அவர் கழனியூரன் என்று ஒரு காலை எடுத்துவிட்டுப் போட்டுக் கொள்வார். ஊரைச் சொல்லி மண் மணத்தோடு பெயரை அழைத்துக் கொள்வதில்தான் எத்தனை இன்பம்!

மதங்களைக் கடந்து, சாதிச் சிக்கல்களைக் கடந்து, கொள்கைகளைக் கடந்து, அரசியல் பார்வைகளைக் கடந்து நட்பு பேணிய எத்தனையோ பேரில், என் மனத்தில் நிறைவாய் அமர்ந்தவர் இந்தக் கழனியூரன் எனும் அப்துல்காதர்!

கண்டவுடன் செய்யும் கைகுலுக்கலுக்கு விடை கொடுத்து, ஊர்ப் பாசத்தால் உடலொடு ஆரத் தழுவிக் கொள்ளும் நட்புறவு எங்களது. எனைவிட வயது 22 பெரியவர். அந்த மூத்த நட்பு, இன்று எனைக் கடந்து சென்று விட்டது.

நேற்றிரவு கூட கி.ரா. 95 நிகழ்வு குறித்து கே.எஸ்.ஆர் உள்ளிட்ட நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தாராம். அவரது மகன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக திருநெல்வேலி சென்றிருக்கிறார்.

சந்தோசபுரத்தில் உள்ள தனது மகனின் இல்லத்தில் வழக்கம் போல் இன்றைய பணிகளை செய்து கொண்டிருந்தவர், காலை உணவாக கஞ்சி மட்டுமே அருந்தியுள்ளார். பின் திடீரென தனது உடல்நிலை ஏதோ போல இருந்ததால் அருகிலிருந்த தனது நண்பரான நெல்லையைச் சேர்ந்த வேம்புவை அழைத்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்களுடன் கால் டாக்ஸி மூலம் சோழிங்கநல்லூரில் உள்ள Global Hospital – Chennai மருத்துவமனைக்கு 10.30 மணி அளவில் கொண்டு சென்றுள்ளனர். வீட்டில் இருந்து அவரை வெளியே அழைத்து வரும்போதே நாடித்துடிப்பு குறைந்து அவரால் நடக்க இயலாத நிலை இருந்ததாம்.

பின் 10.47 மணி அளவில் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வாயிலாகக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நாளை பிற்பகல் 3 மணி அளவில் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Loading...
பகிர்க
முந்தைய கட்டுரைஎன் சகோதரன் தோனி: வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்த பிராவோ!
அடுத்த கட்டுரைதிருமதி மோடியைத் தேடிய அதிகாரிகள்! அமெரிக்க சுவாரஸ்யம்!
பத்திரிகையாளர், எழுத்தாளர். || *இளம் வயதில் பாரம்பரியம் மிக்க ‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கருத்துகளைத் தாங்கிய கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். தேசியக் கண்ணோட்டத்துடன் மற்ற மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பாளர் குழு மூலம் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். பழந்தமிழ் இலக்கியத்தை புதிய கண்ணோட்டத்தில் வாசகர்களுக்கு வழங்கும் இவர், மஞ்சரி இதழில் ‘உங்களோடு ஒரு வார்த்தை’ எனும் தலைப்பில் எழுதிய இலக்கியத் தொடர் கட்டுரைகள், தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. || * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகாபெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். || * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி, இலக்கியம், ஆன்மிகம், வரலாற்றுச் செய்திகள் தாங்கிய ஆறு நூல்களை எழுதியுள்ளார். சக்தி விகடன் பொறுப்பாசிரியராகவும், தினமணி இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள இவருக்கு கொல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. ||