போலி பாஸ்போர்ட்டுக்கு உடந்தை: காவலரைத் தொடர்ந்து தபால்காரர் கைது

0

சென்னை:
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் உடந்தையாக இருந்ததாக, பாஸ்போர்ட் சரிபார்ப்பில் மோசடி செய்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த தபால்காரர் இன்று கைது செய்யப்பட்டார்.

திருவல்லிக்கேணி பள்ளப்பன் தெருவைச் சேர்ந்த ராமு என்பவரை போலி பாஸ்போர்ட் தயாரிப்பு வழக்கில் கடந்த மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் தவிர, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரே‌ஷன் கார்டு ஆகியவற்றையும் போலியாக தயாரித்து உள்ளார்.

ராமுவிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய உளவுப்பிரிவு காவலர் ஏட்டு முருகன் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. பாஸ்போர்ட் வழங்குவதற்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஏட்டு முருகன், ராமுவுடன் கைகோத்து அவர் தயாரிக்கும் போலி ஆவணங்களை உண்மையான ஆவணங்கள்தான் என்று சான்றிதழ் வழங்கியுள்ளார். விசாரணையில் இந்த விவகாரம் தெரிய வந்ததை அடுத்து, ஏட்டு முருகன் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் போலி பாஸ்போர்ட்டு விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வேறு சிலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதில் கண்ணகி நகரைச் சேர்ந்த தபால்காரர் தனசேகர் என்பவர், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றிய இவர், விரைவுத் தபால்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. தபால்காரர் தனசேகர் ஏட்டு முருகனுக்கு உதவியாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் வேங்கடாசலபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திருவல்லிக்கேணி பகுதியில் ஒருவர் கைது செய்யப் பட்டிருப்பது இப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் வழங்கிய போலி பாஸ்போர்ட்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டால் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிப்படலாம்.

Loading...