spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்மலேசியாவில் நடந்தது என்ன? செய்தியாளர்களிடம் வைகோ விளக்கம்

மலேசியாவில் நடந்தது என்ன? செய்தியாளர்களிடம் வைகோ விளக்கம்

- Advertisement -

vaiko in kl airport

மலேசியாவில் நடந்தது என்ன? என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியவை…

மலேசியாவில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் முனைவர் இராமசாமி
அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளைய தினம் (சனிக்கிழமை)
நடைபெறுகின்றது. அதற்கு அவர் அழைப்பிதழ் அனுப்பியதோடு மட்டும் அல்லாமல்,
தனிப்பட்ட முறையில் எனக்குக் கடிதமும் அனுப்பி இருந்தார்.

பாஸ்போர்ட் வாங்குவதற்காகத்தான் நான் நீதிமன்றம் சென்று வந்தேன். நீதிமன்ற
அனுமதியின் பேரில் சென்னை மண்டல பாஸ்போர்ட்அலுவலகம் எனக்குப் புதிய
கடவுச்சீட்டு வழங்கியது. அதை வைத்துக் கொண்டுதான் சென்னையில் உள்ள மலேசியத்
தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்தேன். அவர்களும் கடந்த வாரமே எனக்கு விசா
வழங்கி விட்டார்கள்.

வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்கள். இன்றைக்கு இது நல்ல அனுபவம். நேற்று இரவு
வீட்டில் சாப்பிட்டுவிட்டுச் சென்றதுதான். 24 மணி நேரம் ஆகின் றது. இதுவரை
வேறு எதுவும் நான் சாப்பிடவில்லை. அதனால் என்னுடைய செயலாளர் அருணகிரியும்
எதுவும் சாப்பிடவில்லை.

நான் கோலா லம்பூர் வானூர்தி நிலையத்தின் குடிவரவு பிரிவுக்குச் சென்று எனது
பயண ஆவணங்களைக் கொடுத்தேன். பெயரைத்தான் பார்த்தார்கள். Mr. Vaiko you are
block listed you cant enter into Malaysia என்று சொல்லி, பக்கத்து அறையில்
இருந்த உயர் அதிகாரிகளிடம் என்னை அழைத்துச் சென்றார்கள்.
அவர்கள் என்னிடம் Are You Tamil from Srilanka? நீங்கள் இலங்கைத் தமிழரா?
என்று கேட்டார்கள்.
இல்லை. நான் இந்தியாவில் உள்ள ஒரு தமிழன், இந்தியாவின் நாடாளுமன்ற
உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன் என்று சொல்லி அதற்கான அடையாள அட்டையைக்
காட்டினேன்.

Are you LTTE என்றார்கள்.

I am a supporter of LTTE என்றேன்.

உங்கள் மீது பல வழக்குகள் இருக்கின்றன. அதனால் உங்களை அனுமதிக்க முடியாது
என்றார்கள்.

நான் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முறைப்படி சென்னையில் உள்ள மலேசியத்
தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்து அனுமதி பெற்று வந்துள்ளேன் என்று சொல்லி,
திருமண அழைப்பிதழ், பினாங்கு மாநிலத் துணைப்பிரதமர் அலுவலகத்தில் இருந்து
எனக்கு வந்த அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காட்டினேன்.

இதற்கு முன்பு 2014, 2015 களில் கோலாலம்பூருக்கு வந்துதான் பினாங்குக்குச்
சென்று வந்தேன் என்ற விவரங்களை எல்லாம் கூறினேன்.

அவர்கள் கேட்பதாக இலலை.

அதன்பிறகு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களிடம்
தொடர்புகொண்டு சொன்னேன். அவர் மிகவும் கவலைப்பட்டார்.

எனக்கு அனுமதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும்மேற்கொண்டார். பினாங்கு
முதலமைச்சர் லிம் குவான் யங் அவர்கள், மலேசியத்துணைப்பிரதமரிடம் பேசினார்.

சிறிது நேரம் கழித்து அவர் என்னைத் தொடர்புகொண்டு, you are security threat to
malaysia (உங்களால் மலேசியாவுக்கு பாதுகாப்புக்கு ஆபத்து) என்று
கூறுகிறார்கள். நாங்கள் அனைத்து முயற்சிகளும் செய்து பார்க்கிறோம் என்றார்.

காலை 11 மணி அளவில் குடிவரவு அதிகாரிகள் என்னிடம், மலேசியாவுக்குள் நுழைவதற்கு
உங்களுக்கு அனுமதி கிடையாது என்று துணைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்தும்,
உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்தும் உத்தரவு வந்துவிட்டது. எனவே, நீங்கள்
இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றார்கள்.

அதன்பிறகு என்னை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு ஓரமாக உட்கார
வைத்துவிட்டார்கள்.

விமான நிலையத்தில் உணவகங்கள் இருக்கின்றன. 11.30 மணி ஆகிவிட்டது. ஏதாவது
சாப்பிடலாமா என்று நினைத்தால், நீங்கள் இங்கிருந்து எங்கும் செல்லக்கூடாது.
உங்கள் செயலாளர் வேண்டுமென்றால் போய் வாங்கிக்கொண்டு வரட்டும் என்றார்கள்.

இப்படி அவர்கள் என்னை ஒரு கைதி போன்று வைத்ததால், எனக்கு ஒன்றும் வேண்டாம்
என்று கூறிவிட்டேன்.

அதிகாரிகளை நான் குறைசொல்லவில்லை. அங்கு இருந்த பெண் அதிகாரிகள் மிகவும்
அன்பாகத்தான் பேசினார்கள். மேலிடத்தில் இருந்து உத்தரவு; நாங்கள் என்ன செய்ய
முடியும்? என்றார்கள்.

காலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை16 மணி நேரம் ஒரே இடத்திலேயே
உட்கார்ந்து இருந்தேன். திருக்கிறேன். சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.
தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. அவர்களும் எதுவும் கேட்கவில்லை.

இந்தியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்; எனக்காக பினாங்கு முதல்வர்,துணை
முதல்வர் எல்லாம் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று தெரிந்தபிறகும் கூட
என்னை அங்கிருந்து அசைய விடவில்லை.

இதற்கு என்ன காரணம் என்றால், 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசு ஈழத்தமிழர்களைப்
படுகொலை செய்ததை நான் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டு இருந்தேன்.

அப்போது சென்னையில் இலங்கையின் துணைத் தூதரக அதிகாரியாக அம்சா இருந்தார்.
அவர் தற்போது பிரிட்டனில் இருக்கிறார். அவர் என்னைப் பற்றிய செய்திகளைத்
தொகுத்து, அனைத்து நாட்டு தூதரக அலுவலகங்களுக்கும் ஒரு அறிக்கை அனுப்பினார்.

என் மகளைப் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு விசா வாங்கச் சென்றபோது, You are
ineligible to get Visa because you belong to a banned organisation
என்றார்கள். உங்களுக்கு விசா தர முடியாது; நீங்கள் தடை செய்யப்பட்ட அமைப்பில்
இருக்கின்றீர்கள் என்றார்கள்.

நான் அந்த அமைப்பின் உறுப்பினர் அல்ல. ஆதரவாளன் என்று சொன்னேன். I am not a
member of Organisation. I am supporter என்றேன். அவர்கள் அதை
ஏற்றுக்கொள்ளவில்லை.

பிறகு நான் மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது, என்னைத் தனியாக அழைத்து இரண்டு
மணி நேரம் விளக்கம் கேட்டார்கள்.

ஈழத்தில் கடைசிக்கட்டப் போரின்போது, அப்போது கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள்
தலைமையகம் அடிபட்டதற்குப் பிறகு அங்கு எடுத்த வீடியோ, அவர்களுக்குக் கிடைத்த
முகப்படங்கள், ஆவணங்களை எல்லாம் எடுத்துக் காண்பித்தார்கள்.

1989 பிப்ரவரியில் 25 நாட்கள் வன்னிக்காட்டில் தலைவர் பிரபாகரன் அவர்களுடன்
நான் இருந்தேன். காட்டுக்குள் செல்வதால் பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகள்
அணியும் சீருடையைத்தான் அணிந்து இருந்தேன். அந்தப்படங்கள், பிரபாகரன்
அவர்களுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் வட இந்தியாவில் உள்ள ஊடகங்கள்
பெரிதாகக் காட்டின. நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் அப்போது இருந்ததுபோன்று
செய்தி போட்டார்கள்.நம் தமிழ்நாட்டு ஊடகங்கள் அதைச் சரியாகக் காண்பிக்கவில்லை.

நான் ஈழத்திற்குச் சென்றபோது,
1989 இல் விடுதலைப்புலிகள் அமைப்புக்குத் தடை கிடையாது. அப்போது அங்கு சென்று
நான் இருந்தேன்.
இலங்கைத் தூதரக அதிகாரி அனைத்து நாடுகளுக்கும் என்னைப் பற்றித் தகவல்
அனுப்பியதால் எந்த நாட்டுக்கும் எனக்கு விசா கிடையாது.
பிரஸ்ஸல்ஸ்க்கு மட்டும் கிடைத்தது.

அங்கு சென்று இனப்படுகொலைக் குற்றத்திற்காக இலங்கை அரசைச் சர்வதேச
நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். அனைத்து நாடுகளிலும்,
ஈழத்திலும் உள்ள ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற
கருத்தை நான் முன் வைத்தேன். அதுவரை அந்தக் கருத்தை யாரும் சொன்னது இல்லை.

இதன் பிறகு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய
நாடுகள் எனக்கு விசா கொடுக்கவில்லை. மலேசியாவில் மட்டும் துணை முதல்வர்
முயற்சியில் முன்பு எனக்கு இரண்டு முறை விசா கிடைத்தது. இதுதான் காரணம்.

இப்போது, மலேசியாவில் இந்திய தூதரக அதிகாரியாக திருமூர்த்தி என்ற தமிழர்
இருக்கின்றார். அவர் கேள்விப்பட்டு மாலை 5 மணி வாக்கில் மிகவும் வருத்தப்பட்டு
என்னிடம் பேசினார்.

இந்த நேரத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றோமே? இரண்டு மூன்று
நாட்களுக்கு முன்பு மலேசியச் செய்தித்தாள்களில் நீங்கள் திருமண வரவேற்புக்கு
வருவதாக பொதுவாகச் செய்தி வந்து இருந்தது. இன்றைக்கு நீங்கள் வருகிறீர்கள்
என்பது தெரியாது.

நீங்கள் சாப்பிடக்கூட இல்லை என்பது மிகவும் கவலையாக இருக்கிறது. என் வீட்டில்
இருந்து சாப்பாடு அனுப்பட்டுமா? என்று கேட்டார்.

இப்பொழுது நீங்கள் அனுப்ப முடியாது. எட்டு மணிக்கு என்னை விமானத்தில்
ஏற்றப்போகின்றார்கள். நீங்கள் கேட்டதே எனக்குச் சாப்பிட்டது போன்று இருக்கிறது
என்றேன்.

எனது அலைபேசியை அருணகிரியிடம் கொடுத்து விட்டேன். இவரையும் ஒரு ஓரமாக
வைத்துவிட்டார்கள். என்னைத் தனியாக வைத்துவிட்டார்கள்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டுத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களும்
கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்கள்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற
மக்கள் அவைத்துணைத்தலைவர் மு.தம்பிதுரை,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் சகோதரர் மு.க.ஸ்டாலின்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் சகோதரர் திருநாவுக்கரசர்,
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரி தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.
ராஜா,
தமிழர் தேசிய அமைப்பின் தலைவர் அண்ணன்பழ.நெடுமாறன்,
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.,
தேமுதிக தலைவர் சகோதரர் விஜயகாந்த்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சித் தலைவர் முத்தரசன் இப்படிப் பல தலைவர்கள் என்னை இதுபோன்று நடத்தியது
முறையில்லை என்று கண்டித்து அறிக்கை கொடுத்தற்கு அனைவருக்கும் நான் நன்றி
தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒன்று மட்டும் நான் உறுதியாகச் சொல்ல விரும்புகின்றேன்.

ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தது மட்டும்அல்ல, அதைப்பற்றிப் பன்னாட்டு
அரங்குகளில் எங்கும் பேச விடக் கூடாது என்று இலங்கை அரசு நினைக்கின்றது.
வெளிநாடுகளில் பேசக்கூடாது. குறிப்பாக, சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பதற்காப்
பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் பிரஸ்ஸல்ஸ் நகரில் பேசியதுதான்
முதல் காரணம்.

அதனால், நான் எந்த நாட்டுக்கும் போகக்கூடாது; என் குரலே எழக்கூடாது என்று
நினைக்கின்றார்கள். சிங்கள அரசு அதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டு
இருக்கின்றது.

மலேசியக் குடிவரவு அதிகாரிகள் என்னிடம் அவர்கள் கேட்டது நீங்கள் எல்டிடிஈயா?
இலங்கைத் தமிழரா? உங்கள் மேல் நிறைய வழக்குகள் உள்ளன என்றெல்லாம் கேட்டனர்.

You are a Security threat உங்களால் மலேசியாப் பாதுகாப்பு ஆபத்து என்று
சொல்கிறார்கள் என்று பினாங்கு துணை முதல்வர் அவர்களே என்னிடம் கூறினார்கள்.

கொஞ்சம் கூட அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகின்றார்கள். எனக்கு மிகவும்
வேதனையாக இருக்கின்றது. எங்களால் இயன்ற எல்லா முயற்சிகளையும் எடுத்துப்
பார்த்தோம் என்கிறார்கள்.

அவர்கள் என்னை ஒரு சிறைக்கைதி போல வைத்து இருந்ததால்தான் உணவு அருந்த
வேண்டாம்,
பேசாமல் இருப்போம்என்று முடிவு எடுத்தேன்.

இரவு 9.30 மணிக்கு விமானத்தில் ஏற்றி விட்டார்கள். அவர்களுடைய பாதுகாப்பு
அதிகாரியே உடன் வந்தார். பாஸ்போர்ட்டை என்னிடம் தரவில்லை. ி
விமான கேப்டனிம்தான் கொடுத்தார்கள்.

செய்தியாளர்: இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு அதிகாரிகள் யாரேனும் உங்களுடன்
தொடர்பு கொண்டார்களா?

வைகோ: ஆம். மலேசியாவில் உள்ள இந்தியத் தூதர் திருமூர்த்தி அவர்கள் என்னோடு
பேசினார்கள். மிகுந்த கவலையோடு கேட்டார். அந்த நேரத்தில் அவரால் ஒன்றும் செய்ய
முடியாது. எனக்கு இந்தச் செய்தியே தெரியாது. ஊடகங்களில் செய்தியைப்
பார்த்தபிறகுதான் தெரிந்து கொண்டோம் என்று சொன்னார்.

செய்தியாளர்: இதன் பின்னணியில் வேறு யார் இருக்கின்றார்கள்?

வைகோ:
இலங்கை அரசுதான் இருக்கின்றது. பினாங்கில் உள்ளவர்கள் மூலமாக இதை நான் அறிந்து
கொண்டேன்.

2014,15 ஆம் ஆண்டுகளில் பினாங்கில் இரண்டு மாநாடுகள் International Tamil
Conference நடத்தினோம். நான் அதில் சிறப்புரை ஆற்றினேன்.
அந்த மாநாட்டில் சில தீர்மானங்களை வடித்தோம்.

உலகத்தமிழர் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கினோம். அதன் தலைவர் பேராசிரியர்
இராமசாமி.
அந்த அமைப்பின் சார்பாக நிறைவேற்றிய தீர்மானத்தில், ஈழத்தமிழர் இனப்படுகொலைக்
குற்றத்திற்காக இலங்கை அரசை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி
விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

இதுதான் காரணம். எனவே, என்னை எங்கும் போக விடக் கூடாது என்று
நினைக்கின்றார்கள்.
கடந்த முறை நான் சென்றபோதும் இதே பிரச்சினைதான். எனக்கு விசா கிடையாது
என்றார்கள்.

அப்பொழுது துணைப்பிரதமாக வேறு ஒருவர் இருந்தார். அவரிடம் நமது குலசேகரன்
உள்ளிட்ட மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில்
சென்று முறையிட்டனர். கடைசி நிமிடத்தில்தான் விசா கொடுத்தார்கள்.

செய்தியாளர்:

ஈழத்தமிழர் இனப்படுகொலையை மறைப்பதற்கான முயற்சி என்று கருதுகின்றீர்களா?

வைகோ

ஆம்அதைப்பற்றிய பேச்சே எங்கும் எழக்கூடாது. விசாரணையே கூடாது என்று இலங்கை
அரசு நினைக்கின்றது.

செய்தியாளர்

பேராசிரியர் இராமசாமிக்கு இந்திய விசா வாங்குவதற்காக பிரதமர் நரேந்திர
மோடியைச் சந்தித்தீர்களே? அதுபோல இந்தப் பிரச்சினையைப் பிரதமரின்
கவனத்திற்குக் கொண்டு செல்வீர்களா?

வைகோ

பேராசிரியர் இராமசாமி அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசைக்
கடுமையாகக் குற்றம் சாட்டி, மொரீசியஸ் நாட்டின் பிரதமரையே காமன்வெல்த்
மாநாட்டுக்கு இலங்கைக்குப் போகவிடாமல் தடுத்து நிறுத்தினார்.

இன்றைக்கு உலகில் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கின்ற தமிழர் பேராசிரியர்
இராமசாமி அவர்கள்தான்.

அவர் இந்தியாவுக்குள் நுழையக்கூடாது என்று ஏழு ஆண்டுகள் தடுத்து வைத்து
இருந்தார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்துச் சொன்னேன். பேராசிரியர்
இராமசாமியின் பூர்வீகம் தமிழ்நாடு. மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் துணை
முதல்வராக இருக்கின்றார். அவர் ஒரு பேராசிரியர், கல்விமான். அவரை
இந்தியாவுக்கு வர விடாமல் தடுத்து வைத்து இருக்கின்றார்கள்.

இராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார். இவர் ஏன் வரக்கூடாது? எனவே நீங்கள் அனுமதி
தாருங்கள் என்று கேட்டேன். அனுமதி கொடுத்தார்.

ஆனால், ஒன்பது ஆண்டுகளாக நான் என் மகளையோ பேத்திகளையோ பார்க்க
அமெரிக்காவுக்குப் போக முடியவில்லை. இதுவரையிலும் எனக்கு விசா
தரவில்லை.நீங்கள் வாங்கித் தாருங்கள் என்று பிரதமரிடம் கேட்டது இல்லை.

கேட்டால், செய்து கொடுத்து இருப்பார்கள்.

எனக்கு விசா இல்லை என்பதை நான்அதிகமாகச் சொல்லிக் கொள்வது இல்லை. இன்றைக்கு
அதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்து இருக்கின்றது.

இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஒரு பொது விசாரணை வேண்டும்,
சர்வதேச விசாரணை வேண்டும், ஐ.நா. பொதுச்சபையில் விசாரிக்க வேண்டும் என்ற குரல்
எங்குமே எழக்கூடாது என்று இலங்கை அரசாஙகம் நினைக்கின்றது.

செய்தியாளர்

உங்களுக்கு அனுமதி இல்லை என்று சொன்னபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

வைகோ

அவர்கள் இப்படிச் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான்
அவர்களிடம் திருமண அழைப்பிதழ், பேராசிரியர் தனிப்பட்ட முறையில் அழைப்பு
விடுத்து எனக்கு எழுதி இருந்த கடிதம், இதற்கு முன்பு நான் மலேசியாக வந்து போன
ஆவணங்கள், நான் இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்பதற்கான
அடையாள அட்டை எல்லாவற்றையும் கொடுத்தபோதிலும் கூட, நான் சொன்னது எதையுமே
அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

ஒரேயொரு பெண் அதிகாரி மட்டும் என்னிடம் வந்து தண்ணீர் குடியுங்கள் என்று
சொன்னார். அந்த அறையின் ஓரு மூலையில் உட்கார வைத்து இருந்தார்கள். சிறையில்
வைத்து இருப்பது போலத்தான் வைத்து இருந்தார்கள். நானும் ஒன்றும் சொல்லவில்லை.

பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங் அவர்களும் கடுமையாக
முயற்சித்தார்கள். அவர் மலேசியத் துணைப்பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம்
நேரடியாகத் தொலைபேசியில் பேசினார்.

அப்பொழுது துணைப்பிரதமர் என்னைப் பற்றிய எல்லாக்குறிப்புகளையும் கேட்டு
வாங்கிக் கொண்டார். அதனால் அவர்கள் என்னிடம் மாலை நான்கு மணிக்குள் அனுமதி
கிடைத்து விடும் என்று என்னிடம் சொன்னார்கள்.

ஆனால் காலை 11 மணிக்குக் குடிவரவு அதிகாரிகள் என்னிடம் ‘துணைப்பிரதமர்
அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு அதிகாரபூர்வமாகத் தகவல் வந்திருக்கின்றது.
நீங்கள் கருப்புப் பட்டியலில் இருக்கின்றீர்கள். மலேசியாவுக்குள் நுழைய
உங்களுக்கு அனுமதி இல்லை என்று சொன்னார்கள்.

செய்தியாளர்கள்:

சென்னையில் உள்ள மலேசியத்தூதரகம் உங்களுக்கு விசா கொடுதது இருக்கின்றார்களே?

வைகோ

அதுதான் எனக்கும் வியப்பாக இருக்கின்றது. இவர்கள் கடந்த வாரமே விசா கொடுதது
விட்hடர்கள்.
நான் மலேசியாவுக்கு வருகின்ற செய்தி மூன்று நாள்களுக்கு முன்னரே அங்கே
செய்தித்தாள்களில் வந்து விட்டது.

அதன்பிறகுதான், இலங்கை அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றது.

கருப்புப் பட்டியலில் என் பெயர் இருப்பது மட்டும் அல்ல, மலேசியாவுக்கே நான்
ஆபத்தானவன் (Security threat to Malaysia) என்று சொன்னதுதான் வியப்பாக
இருக்கின்றது.

நான் ஒரு சாதாரண ஆள். என்னை அந்த அளவுக்குப் பெரிய ஆளாக்கி விட்டாரகள்.

செய்தியாளர்: உங்களை ஒரு குற்றவாளி போல நடத்தினார்களா?

வைகோ அப்படி இல்லை. ஆனால் அடிப்படைப் பண்பாடு இல்லை. The common courtesty,
genuine courtersy were lacking.

செய்தியாளர்:

ஒரு இந்தியக் குடிமகனை மலேசியாவில் அவமதித்து இருக்கின்றார்கள். மத்திய அரசு
என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று எதிர்பார்க்கின்றீர்கள்.

வைகோ: இதுகுறித்து நான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுத இருக்கின்றேன். நடந்த
நிகழ்வுகளை விளக்கி, இந்தப் பிரச்சினை குறித்து நீங்கள் மலேசிய அரசிடம்
விளக்கம் கோர வேண்டும் என்று கேட்பேன்.

செய்தியாளர்:
மலேசியா அரசாங்கத்திற்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

வைகோ

அவர்கள் இப்படி நடந்து கொண்டது மிகத்தவறானது. அவர்களுக்கும் நமக்கும் இடையே
நல்ல உறவுகள் இருக்கின்ற நிலையில், இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள்
உறுப்பினரா ன என்னை, மலேசியாவில் என் மீது எந்த வழக்குகளும் இலலாத நிலையில்
என்னை அந்த நாட்டுக்குள் அனுமதிக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது.

செய்தியாளர்கள்

தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் உங்களைத் திருப்பி அனுப்பியதைக்
கண்டித்து இருக்கின்றார்களே? அதுபற்றி உங்கள் கருத்து?

வைகோ

ஆம் அதைக் கேட்டு எனக்கு மிகவும் மகிழ்சசியாக இருக்கின்றது.
எதிலும் ஒரு நன்மை உண்டு.
நான் ஒன்றும் பெரிதாகப் பத்து மாதங்களோ ஓராண்டோ சிறையில் இருக்கவில்லை.
ஒரு 16 மணி நேரம உட்கார வைத்து இருந்தார்கள்.

ஆனால் அதற்காகத் தமிழகத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்களும் கண்டனம்
தெரிவித்ததால் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கினறேன்,

I extend my thanks to all the leaders of Tamilnadu.

அனைத்துத் தலைவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிதுக் கொள்கின்றேன்.

இவ்வாறு செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe