Tuesday, July 25Dhinasari

ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?: ஜெ.,வை பலிகடாவாக்கும் ராம மோகன ராவ்

 

சென்னை:
ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? என்று தனது தவறுகளுக்கு புகலிடம் தேடும் வகையில் ஜெ.,வை பலிகடாவாக்கி பேட்டி அளித்தார் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ள தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ். மேலும் ”என் மீது குறி வைத்துள்ளனர்; என் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்றும் கூறினார்.

ஊடகங்களுக்கு பேட்டி:

சென்னை, அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் டிச.27 இன்று காலை 10:50 க்கு ஊடகத்தினரை வரவழைத்து பேட்டி அளித்தார் ராம மோகன ராவ்.
அப்போது அவர் பேசியவை:
வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு ஆதரவு தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்., துணை தலைவர் ராகுல், அ.தி.மு.க., – எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் தீரன் ஆகியோருக்கு நன்றி.

என் வீட்டில், துணை ராணுவம் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துணையுடன் சோதனை நடந்துள்ளது. அவர்கள் என்ன கண்டுபிடித்தனர் என்பது குறித்த ‛பஞ்சநாமா’ எனப்படும் அவர்கள் அளித்த இரண்டு அறிக்கைகள் உள்ளன.

ஒன்று, என் வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள், தலைமைச் செயலகத்தில் என் அறையில் எடுக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பது குறித்த அறிக்கைககள். இப்போதும் நான் தமிழக தலைமைச் செயலாளர் தான். எனக்கு இன்னும் பணியிட மாற்றல் உத்தரவை தமிழக அரசு அளிக்கவில்லை. இப்போது உள்ள தலைமைச் செயலர் அனேகமாக பொறுப்பு தலைமைச் செயலாளராகத்தான் நியமிக்கப் பட்டிருப்பார்களென்று நினைக்கிறேன்.

தலைமைச் செயலாளர் அறையில் சோதனை நடந்தது என்பது அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல். இதைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. என் வீட்டில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் என்னை வீட்டுச் சிறையில் வைத்தனர். அப்போது என் வீட்டில் என் மனைவி, என் மகள், என் மகளின் மகள் ஆகியோர் மட்டுமே இருந்தனர்.

என் வீட்டில் இருந்து, ரூ.1,12,320, என் மனைவி மற்றும் மகளுக்கு சொந்தமான, 40 முதல் 50 சவரன் நகைகள்; 25 கிலோ வெள்ளி சுவாமி சிலைகள் ஆகியவற்றை மட்டுமே, வருமான வரித் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

ரகசிய ஆவணங்கள் எதையும் அவர்கள் கைப்பற்றவில்லை. என் வீட்டுக்கு வருமான வரித்துறையினர், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், டிச.21 அதிகாலை, 5:30க்கு வந்தனர். வந்த உடன் வீட்டைப் பூட்டி விட்டனர். என்னை வீட்டுச் சிறையில் வைத்தனர். அவர்கள் ஒரு ‛சர்ச்’ வாரன்ட்’ காட்டினர். அதில் என் பெயர் இல்லை. என் பெயரில் சர்ச் வாரன்ட் இல்லாமல், என் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

என் மகன் விவேக் பெயர் அந்த சர்ச் வாரன்ட்டில் இருந்தது. என் மகன் அமெரி்க்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பில் எம்.எஸ்., பட்டம் பெற்றவர். படித்து முடித்து விட்டு நாடு திரும்பிய பிறகு ஒரு வாரம் கூட அவர் என் வீட்டில் தங்கவில்லை. அவர் தனியாகத் தான் இருந்தார்.

தலைமைச் செயலகத்தில் என் அறையில் இருந்து எம்.ஆர்.சி., கிளப்பின் பில்களை மட்டுமே அவர்களால் கைப்பற்ற முடிந்தது. அது தவிர சில உதிரி காகிதங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவை, மக்கள் என்னிடம் அளித்த மனுக்கள். தலைமைச் செயலாளர் அறை என்பது, முதல்வரின் ரகசிய ஆவணங்கள் உள்ள அறை. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீதான கிரிமினல் வழக்குகளுக்கான ஆவணங்கள் உள்ள அறை. அந்த அறையில் சோதனை நடத்த, முதல்வர், உள்துறைச் செயலாளரிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.

புரட்சித் தலைவி ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

நான் புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவன். 1994ஆம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டராக இருந்த நாள் முதல், அவரால் பயிற்சி அளிக்கப்பட்டவன். நான், 32 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகப் பணியாற்றியவன். எனக்கே, இந்த கதி என்றால் அ.தி.முக., தொண்டர்களின் கதி என்ன? மக்களின் கதி என்ன? என் வீட்டிலும், அலுவலக அறையிலும் சோதனை நடத்த வேண்டும் என்றால், முதலில் என்னை அப்பொறுப்பில் இருந்து டிரான்ஸ்பர் செய்திருக்க வேண்டும். என்னை டிரான்ஸ்பர் செய்ய, இரண்டு நிமிடங்கள் போதும். மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசுக்கு இதற்கான உத்தரவு அளித்து இருந்தால், டிரான்ஸ்பர் செய்திருப்பார்கள்.

என் வீட்டில், என்னையும் என் குடும்பத்தினரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறையினருக்கு என்னிடம் இருந்து என்ன தேவை என்பது புரியவில்லை. முதல்வர் ஜெயலலிதா 75 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அவரது உடல் நிலை நிலவரத்தை கவனித்து வந்தேன். அதன் பின், ‛வர்தா’ புயல் பாதிப்புக்கான நிவாரணப் பணிகளில் இருந்தேன்.

தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. மாநில அரசு மீது எந்த மரியாதையும் அவர்களுக்கு இல்லை. என் மருமகள் நிறைமாத கர்ப்பிணி. அவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். என் உயிருக்கு ஆபத்து. எனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

– இவ்வாறு ராம மோகன் ராவ் கூறினார்.

இதனிடையே, ராமமோகன் ராவ் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது தவறு என்றும், தனது தவறை திசை திருப்பப் பார்க்கிறார் என்றும் கிறிஸ்துதாஸ் காந்தி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.,) கருத்து தெரிவித்துள்ளார்.

தன் மீதான விசாரணையைத் தடுக்கும் விதமாக அவர் பேசியுள்ளதாக வழக்கறிஞர் நளினி கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தருவதாகக் கூறிய அவர், தன் கருத்தைத் தெரிவித்த பின்னர், செய்தியாளர்களின் கேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை. பேட்டியை அத்துடன் முடித்துக் கொண்டு கிளம்பினார்.

மணல் ஒப்பந்த நிறுவனங்கள், மகன் விவேக் நிறுவனங்கள் குறித்த எந்தக் கேள்விகளையும் அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

இதனிடையே இவரது பேட்டி குறித்த செய்தி வெளியானதும், தனது தவறுகளுக்கு ஜெயலலிதாவை கேடயம் ஆக்கி, அவர் பெயரை பலிகடாவாக்கியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவியுள்ளன.

இனி, மத்திய பாதுகாப்புப் படையோ, வருமான வரித்துறையோ மாநில அரசின் அதிகார மட்டத்தில் நடக்கும் தவறுகளை சோதனையிட வேண்டுமென்றால், பாஸ்போர்ட் விசா, அனுமதிகளெல்லாம் முறைப்படி பெற்று பின்னர் வர வேண்டும் என்றும் கேலியாக கருத்துகள் பரவுகின்றன.