370வது சட்டப் பிரிவை நீக்குங்கள்; காஷ்மீர் இந்தியாவின் அங்கம் என ஒரே வாரத்தில் உலகம் உணரும்: சிவசேனா

0

மும்பை:

காஷ்மீர் குறித்த சிறப்புப் பிரிவு 370வது சட்டப் பிரிவை நீக்குங்கள், அப்போது காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என ஒரே வாரத்தில் உலகம் உணர்ந்து கொள்ளும் என்றும், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் போரிட பசு பாதுகாவலர்களை அனுப்புங்கள் எனவும் சிவசேனா கட்சி காட்டமாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான கட்டுரையில்,

‘இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தப் போவது யார்? பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வெற்றுத் தாள்களில் கண்டனம் தெரிவித்துவிட்டு, வெறுமனே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தால் போதுமா? காஷ்மீரில் செயல்பட்டு வரும் அரசு முற்றிலும் செயலிழந்து விட்டது. காஷ்மீரில் நடந்து வருபவை எல்லாம் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தைத்தான் விளைவிக்கும். காஷ்மீரில் பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர், பயங்கரவாதச் செயல்களை நடத்தி வருகின்றனர். தற்போது காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 56 இஞ்ச் மார்பளவு கொண்டவரின் அரசு தேவைப்படுகிறது.

பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடவேண்டும். காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கி விட்டால் போதும், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத மாநிலம் என்பதை ஒரே வாரத்தில் உலகம் உணர்ந்து கொள்ளும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘மத்தியில் ஆள்பவர்கள், விளையாட்டு, கலாசாரம் போன்ற விவகாரங்களுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்கின்றனர். ஆனால் இப்போது மதம் மற்றும் அரசியல் விவகாரங்களில்தான் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாடுகளை இறைச்சிக்காகக் கொண்டு செல்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து மாடுகளைப் பறிமுதல் செய்து வரும் பசுப் பாதுகாவலர்களை, அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் போரிட ஏன் அனுப்பக் கூடாது?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுபோல், சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பக்தர்கள் மீது நடத்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த நாட்டின் மீதும், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக., மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்தத் தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக., ‘பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் மோடி 56 இஞ்ச் மார்பளவு கொண்டவர். அதனால் அவர் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்’ என பிரசாரம் செய்தது.

அதை அடுத்து தேர்தலில் பாஜக., வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்னர், அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 56 இஞ்ச் மார்பளவு கொண்ட பிரதமர் அந்தத் தாக்குதலை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் அமர்நாத் யாத்திரீகர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பக்தர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில்தான், பாஜக.,வுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனா, தனது கட்சி பத்திரிகையான ’சாம்னா’வில், இவ்வாறு காட்டமாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக.,வை விமர்சித்துள்ளது.

Loading...