spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மா!

திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மா!

- Advertisement -

 

படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த பிரம்மனுக்கு அகந்தை குடிகொண்டது. காரணம், சிவபெருமானைப் போல் தனக்கும் ஐந்து தலைகள் என்பதாலும், தான் படைப்புத் தொழிலில் இருப்பதாலும் கர்வம் எட்டிப் பார்த்தது. சிவனையும் தன்னையும் ஒன்றாகக் கருதிக் கொண்டார். இதையறிந்த சிவனார் தகுந்த பாடம் கற்பிக்க எண்ணினார். “தலை ஐந்து இருப்பதால்தானே இப்படி ஓர் எண்ணம்…’ என்று எண்ணிய சிவனார், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிந்தார். மேலும் பிரம்ம தேவனின் படைப்புத் தொழிலும் பறிபோனது. இதனால் பெரிதும் வருந்திய பிரம்ம தேவன், தன்னை மன்னித்து அருளும்படி சிவனாரை வேண்டினார்.

 

சிவனாரும் அவருக்கு சாபத்தில் இருந்து விடுபடும் வழியைக் கூறினார். அதன்படி, இந்தத் தலத்துக்கு வந்த பிரம்ம தேவர், அங்கே சிவரூபமாக இருந்த 12 லிங்கங்களையும் (த்வாதச லிங்கம்) வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்றார். பிரம்ம தேவனின் படைப்புத் தொழிலும் அவருக்கு மீண்டும் வந்தது. பிரம்மனின் தலை எழுத்து மாற்றப்பட்டு, மீண்டும் சக்தி பெற்றார் பிரம்மன். இதை அடுத்து இறைவன் அளித்த வரத்தின் படி, பிரம்மன் தன்னை நாடி வரும் பக்தர்களின் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றியருள்கிறார்.

கோயிலில் மூலவராகத் திகழ்பவர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். அம்பிகை ஸ்ரீபிரம்மநாயகி. இங்கே சிறப்பாகத் திகழ்வது பிரம்ம தீர்த்தம். திருப்பிடவூர், திருப்படையூர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மன் இங்கேயுள்ள சிவபெருமானை வழிபட்டதால் மூலவருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனப் பெயர். அம்பாள் பிரம்மநாயகி. அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்ற வைப்புத் தலமாகத் திகழும் இந்தத் தலம் புராதனத் தலமே.

சந்நிதி வலம் வரும்போது, மூலவர் சந்நிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். ஒட்டினாற்போல், தனி சந்நிதியில், பிரம்மா மிகப் பெரிய திருமேனியில் அமர்ந்த நிலையில் அருள்கிறார். இங்கே, பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி கோஷ்டத்தில் ஸ்ரீவிஷ்ணுவும் திகழ்வதால், மூன்று தேவர்களையும் ஒரே சுற்றில் தரிசித்துவிடும் பாக்கியம் கிடைக்கிறது.

அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கே மங்கல ரூபியாகக் காட்சி தருகிறார். மனிதர் வாழ்வை சிறக்கச் செய்யும் பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தருகின்றனர். மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக் கிழமைகளில் பிரம்மாவைக் காண்பது சிறப்பு. இங்குள்ள சந்நிதிகளில் மஞ்சள் நிற வஸ்திரத்தையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்த ரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சந்நிதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் ஆடையே அணிவித்து பூசிக்கின்றனர்.

குரு பகவானுக்கு அதிதேவதையாகத் திகழ்பவர் பிரம்மா. பிரத்யதி தேவதை தட்சிணாமூர்த்தி. இருவரையும் ஒருசேர இங்கே தரிசிக்கலாம். எனவே, வியாழக் கிழமை சிறப்பான நாள். தலையெழுத்து மாறும் விதி உள்ளவர்களே இங்கே பிரம்மனின் பார்வையில் படுவர் என்பது நம்பிக்கை. எத்தனையோ பக்தர்களின் நோய் ஆச்சரியப் படும் விதத்தில் குணமாகியிருக்கிறதாம். பெண்களுக்கு சுகப் பிரசவம், வியாபாரத்தில் வீழ்ச்சி கண்ட நிலை மாறுதல், மாணவர்களுக்கு கல்வியில் திடீர் முன்னேற்றம், திடீர் பணி உயர்வு, பணி மாற்றல், திருமணத் தடை அகன்று ஆச்சரியப் படும் விதத்தில் நல்ல வரன் அமைதல் என்று பல அனுபவங்கள் இங்கே பக்தர்களுக்கு உள்ளது.

பதஞ்சலி சந்நிதி: பதஞ்சலி முனிவர் பத்து தலங்களில் ஐக்கியம் ஆனதாகக் கூறப்படுகிறது. அவற்றில் இந்தத் தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் சிறிய லிங்கம் உள்ளது. அருகே பதஞ்சலி முனிவரின் படங்கள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரம்மா சந்நிதியின் வலப்புறம் உள்ள மேடையில் சப்தமாதர் விக்ரகங்களும் வரிசையாக உள்ளன. ஒவ்வொரு அமாவாசைகளிலும் இந்த லிங்கத்துக்கு தயிர் சாதம் படைத்து பூஜை செய்கின்றனர். வைகாசி சதய நட்சத்திரத்தில் குரு பூஜை நடைபெறும். மன அமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பு பெற, குருவருள் கிடைக்க இவரை வழிபடுகின்றனர். தியான மண்டபம் போல் இருப்பதால் பலரும் அமர்ந்து தியானிப்பதைக் காணலாம்.
இங்கே பிரம்மன் வழிபட்ட சோடச லிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது.

பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. மேலும், பிரம்மனை ஒன்பது முறை வலம் வர வேண்டுமாம்.

சந்நிதியை வலம் வரும்போது, கால பைரவர், சூரியன் ஆகியோரையும் அடுத்தடுத்து காணலாம். இவர் முன் தியானத்தில் அமர்ந்து, சிறுவர்களின் பயம் போக்கவும், வீடு வாகனம் வாங்கி சுக வாழ்க்கைக்கும் வேண்டிக் கொள்கின்றனர்.

பன்னிரு லிங்கங்கள்:
ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் சந்நிதி, அம்பிகை சந்நிதியை அடுத்து இடப்புறம் வெளியே பிரம்மா வழிபட்ட பன்னிரு லிங்கங்களுக்கும் தனித் தனி சந்நிதிகள் உள்ளன. பழைமையான காஞ்சி கைலாசநாதர் கோயிலை நினைவூட்டும் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயிலும் இங்கே உள்ளது.

வற்றாக் குளம்:
இந்திரன் கயிலாயத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து திருவானைக்கா ஜம்புகேஸ்வரரை வழிபடுவானாம். ஒருநாள் திருப்பட்டூரில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதரை வழிபடும் வியாக்ரபாதர் இந்திரனைத் தடுத்து நிறுத்தி தீர்த்தம் கேட்டார். இந்திரன் மறுத்துவிட்டான். வியாக்கிரபாதர் சினமடைந்து, உடனே புலிபாச்சிக் குளம் என்ற குளத்தை உருவாக்கினார். அதன் தீர்த்தம் கொண்டு காசி விஸ்வநாதரை வழிபட்டாராம். வியாக்கிரபாதர் உருவாக்கிய புலிபாச்சிக் குளத்தில் கோடைகாலத்திலும் நீர் வற்றுவதே இல்லையாம்.

திருவிழா:
பங்குனி மாத பத்து நாள் திருவிழா.

சிறப்பம்சம்:
குரு பகவானுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, ஜாதகத்தில் குரு தொடர்பான தோஷம் இருப்பவர்களுக்காக வியாழக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. திங்கள்கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் அவரவர் பிறந்த நாளில் (நட்சத்திரப்படி) பிரம்மாவை வணங்குவது நல்ல பலனைத் தரும்.

திருமணத் தடை விலக, பிரிந்த தம்பதியர் சேர்க்கைக்கு, தொழில், வியாபார, பணி வளர்ச்சி அடைய என்று பிரம்மாவிடம் கோரிக்கை விடுத்து வேண்டுவோர் பலர். படைத்தலுக்கான தேவதை என்பதால், பிரம்மனிடம் புத்திரப் பேறு வேண்டித் தொழுகின்றனர். சந்தானப் பிராப்திக்கான பிரார்த்தனை தலமாகவும் திருப்பட்டூர் திகழ்கிறது.

இருப்பிடம்
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள சிறுகனூரில் இருந்து 4 கி.மீ. தொலைவு.

தரிசன நேரம்:
காலை 7.30-12, மாலை 4-8. (வியாழக் கிழமைகளில் காலை 6-12.30 வரை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe