
புது தில்லி:
துப்பாக்கி முனையில் பாகிஸ்தானியருடன் திருமணம் நடைபெற்ற இந்தியப் பெண், தான் ரண வேதனை அனுபவித்த பின்னர் இந்தியா திரும்ப பெரும் உதவிகளைச் செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தில்லியைச் சேர்ந்த இளம் பெண் டாக்டர் உஸ்மா (20), பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்தவர் தாகிர் அலியை மலேசியாவில் வைத்து சந்தித்தார். அப்போது இருவரும் காதல் வயப்பட்டனர். பின்னர், கடந்த 1–ஆம் தேதி, உஸ்மா, வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றார். பாகிஸ்தான் சென்ற பின்னர்தான், தாகிர் அலியின் உண்மைப் பின்னணி அவருக்குத் தெரியவந்தது. இந்நிலையில் அவர் நாடு திரும்ப எண்ணினார். ஆனால், கடந்த 3–ஆம் தேதி, தாகிர் அலிக்கும் உஸ்மாவுக்கும் துப்பாக்கி முனையில் திருமணம் நடந்ததாம். பின் 5–ஆம் தேதி உஸ்மா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தாகிர் அலி தூதரகத்தை அணுகிய போது, உஸ்மா இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல விரும்புவதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.
இதையடுத்து தாகிர் அலிக்கு எதிராக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் உஸ்மா புகார் அளித்ததுடன், நீதிபதி முன்னிலையில் வாக்குமூலமும் கொடுத்தார். தாகிர் அலி ஏற்கெனவே திருமணமாகி 4 குழந்தைகள் தனக்கு இருப்பதை மறைத்துவிட்டார் என்றும், துப்பாக்கி முனையில் மிரட்டி வலுக்கட்டாயமாக தன்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகவும் உஸ்மா கூறினார். வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், இளம் பெண் உஸ்மாவை இந்தியா அனுப்ப நேற்று அனுமதி அளித்தது. அத்துடன், வாகா எல்லை வழியாக உஸ்மா செல்லும் போது அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட உஸ்மா, அட்டாரி – வாகா எல்லை வழியாக இன்று இந்தியா வந்தார். போலீஸ் பாதுகாப்புடன் வந்த அவர், எல்லையில் இந்திய மண்ணைத் தொட்டுக் கும்பிட்டார். அவரது கண்கள் கலங்கி உணர்ச்சிப் பிழம்பாக இருந்தார். அதன் பின்னரே அவர் இந்தியாவுக்குள் காலடி வைத்தார். அவரை இந்திய பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையினர் வரவேற்றனர்.
இந்நிலையில், உஸ்மாவின் சகோதரர் வாசிம் அகமது இது குறித்துக் கூறியபோது, “நாங்கள் எதிர்பார்த்ததை விடவும், அரசு எங்களுக்கு உதவி செய்துள்ளது; உஸ்மாவை இந்திய தூதரகம் முழு கவனத்துடன் பார்த்துக் கொண்டது; உஸ்மா நாடு திரும்ப உதவி செய்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை” என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து, தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உஸ்மாவை வரவேற்றும், அவர் எதிர்கொண்ட சிரமங்களுக்கு வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Uzma – Welcome home India’s daughter. I am sorry for all that you have gone through.
— Sushma Swaraj (@SushmaSwaraj) May 25, 2017



